செப். 11: முண்டாசுக் கவிஞனின் நினைவு தினம் இன்று
பெண் விடுதலை போராளி நவீன தமிழ்க்கவிதைகளின் முன்னோடி மகாகவி பாரதி நினைவு தினம்;
சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்று எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதையடுத்து, சில காலம் காசியில் வசித்து வந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
சுதந்திர போரில் பாரதியின் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே போன்ற பல பாடல்கள் தேசிய உணர்வை தூண்டியது. விடுதலை உணர்வை தூண்டும் ஏராளமான பாடல்களை பாடினார்.
அது மட்டும் இல்லாமல் சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம், காக்கை குருவி எங்கள் சாதி என தீண்டாமை எதிர்த்து உரக்க முழக்கம் இட்டார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
எதையுமே யாசகமாக கேட்காமல் உரிமையில் கேட்டவர் பாரதி.
விநாயகரிடம் ' நான் கேட்கிறேன், நீ அப்படியே ஆகட்டும்' என மட்டும் கூறு என்பதாக
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக;
துன்பமும், மிடிமையும் நோவும், சாவும் நீங்கிச்
சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க!' என்பேன்!
இதனை நீ திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்ஙனே யாகுக'* என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழுது எனக்கு
இவ்வரத்தினை அருள்வாய்! என பாடியிருப்பார்
காலனை தன் காலால் எட்டி உதைப்பேன் என கூறியவர்;
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்
என பாடியவர் ஆனாலும் தனது 39வது வயதில் உடல்நலம் குன்றி காலமானார்.
அவர் பாடலிலேயே தனக்கு மரணமில்லை எனல் கூறியிருப்பார்
பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
ஆம். அவரது கவிதைகள் வாழும் வரை அவருக்கு மரணமேது? பார்மீது சாகாதிருப்பார் பாரதி