அலங்காநல்லூரில் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டு - கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் அலங்காநல்லூரில் பிரபல தனியார் வங்கியின் முன்பாக உள்ள அவரது அண்ணனின் பால் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு பால் கடையின் முன்பாக தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வண்டி திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருகே உள்ள கடையில் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த சிசிடிவி காட்சியில் இரவு சரியாக 1.30 மணியளவில் ஒரே டூவீலரில் வந்த 3 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு சைடு லாக்கை லாவகமாக உடைத்து நைசாக உருட்டி சென்று கொள்ளையர்கள் தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி பதிவுகளை கொண்டு அலங்காநல்லூர் காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அலங்காநல்லூர் தனிச்சியம் செல்லும் சாலையில் பேருந்து நிலையம் அருகே சாலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வண்டியை கொள்ளையர்கள் திருடி செல்வது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.