மன்னர் காலத்தில் உயிர்நீத்த 36 புதுமணத்தம்பதியரின் நினைவைப் போற்றும் மக்கள்
திருமங்கலம் அருகே 36 திருமண ஜோடிகள் வீரமரணமடைந்த இடத்தில் ஆண்டுதோறும் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்;
மன்னராட்சி காலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 36 புதுமண ஜோடிகள் வீர மரணமடைந்த இடத்தில் கிராமமக்கள் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ளது கட்ராம்பட்டி கிராமம். இவ்வூரின் நுழைவாயிலில் 72 தாத்தகாரு வீரகோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பெயர் பலகையில் 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் வரலாற்றுத் தரவுகள் குறித்து கட்ராம்பட்டியை சேர்ந்த ரங்கராஜன் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு தமிழகத்தில் மன்னர், ஜமீன்தாரர் ஆட்சி நிலவிய காலத்தில் எங்கள் கட்ராம்பட்டி கிராமம் பெயர் பெற்று விளங்கியது.
பொதுவாக கிராமங்களில் நடைபெறும் பிரச்னைகளுக்கு அந்த காலத்தில் பஞ்சாயத்து வைத்து தீர்த்து கொள்வது வழக்கம். ஆனால் மற்ற ஊர்களில் தீர்வு காண முடியாத பிரச்னைகளுக்கு எங்கள் கட்ராம்பட்டி பஞ்சாயத்து சொல்லும் தீர்ப்பு தான் இறுதியானது. அதனை அனைவரும் ஏற்று நடந்து வந்துள்ளனர். தென்மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர், ஒரு இளம்பெண் மீது ஆசை கொண்டார். அந்த பெண்ணை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி விடுமாறு பெண்ணின் பெற்றோருக்கு உத்தரவிட்டார். தன்னால் ஜமீன்தாரின் ஆசைநாயகியாக வாழமுடியாது என திட்டவட்டமாக கூறி தனது தாயுடன் அந்த பெண், ஜமீனை விட்டு வெளியேறி ஒவ்வொரு கிராமமாக தஞ்சம் கேட்டுள்ளார்.
அங்குள்ள மக்கள் ஜமீன்தாரை பகைத்துக் கொள்ள முடியாது என கூறி அனுப்பவே, கடைசியில் கட்ராம்பட்டிக்கு வந்தார். எங்கள் கிராம மக்கள் தாய், மகளை அடைக்கலம் கொடுத்து ஏற்றுக் கொண்டனர். மறுநாள் எங்கள் கிராமத்தில் 36 ஜோடிகளுக்கு கல்யாணம் நடைபெற்றது. அப்போது ஜமீன்தாரின் படைகள் ஒவ்வொரு கிராமமாக தாய், மகளை தேடியபடியே கட்ராம்பட்டிக்கு வந்தனர். அங்கு இருவரும் தஞ்சமடைந்துள்ளதை தெரிந்து கொண்ட படையினரிடம் கிராம மக்கள், எங்களிடம் தஞ்சம் வந்தவர்களை திருப்பி அனுப்ப மாட்டோம் என கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து படைகள் திரும்பிய சமயத்தில் கிராமத்தை சேர்ந்த ஒருவர், வெற்றிநாதமான கொம்பு கருவியை ஊதியுள்ளார்.
இது ஜமீன்தாரை கோபமடைய செய்யவே, படையுடன் வந்து எங்கள் கிராமத்தில் புகுந்து, அப்போதுதான் புதிதாக திருமணம் செய்திருந்த 36 ஆண்களையும் வெட்டி கொன்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த 36 புதுப்பெண்களும், தங்களது கணவன் சிதையில் உடன்கட்டை ஏறி விட்டனர். இதனை கண்ட தஞ்சமடைய வந்திருந்த தாயும், பெண்ணும் தங்களால்தான் அனைவரும் உயிரிழந்தனர் எனக் கூறி, அவர்களும் அந்த தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த திருமண ஜோடிகள் 72 பேரின் நினைவாக கிராமத்தில் கோயில் எழுப்பி ஆண்டுதோறும் வழிபாடு நடத்தி வருகிறோம் என்றார்.
பலி பீடம், கற்களை கொண்டு வழிபாடு:
நாகராஜன் என்பவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் கடைசி ஞாயிறு அன்று தாத்தகாரு வீரக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். எங்கள் கிராமம் மட்டுமின்றி அக்கம்பக்கத்து கிராமமக்களும் வந்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்வர். தாத்தகாரு என்பது நமது மூதாதையரை தாத்தா என அழைப்பதால் இக்கோயில் தாத்தா கோயில் எனப்படுகிறது. கோயிலில் பலி பீடம், கற்களை வைத்து வழிபாடு செய்து வருகிறோம் என்றார்.