பொதுமக்களை பிரிக்கும் எதிர்கட்சிகள் -ஆர்பி.உதயகுமார்

Update: 2021-03-23 11:30 GMT

பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெற முயற்சி செய்வதாக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

மதுரை, திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி மீனாட்சிபுரம் சௌடார்பட்டி, வலையபட்டி, பூசலப்புரம் மதிப்பனூர் நாகையாபுரம் இடையபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்த போது அங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது கட்டிட தொழிலாளிக்கு உதவும் வண்ணம் தானும் கட்டிடத்திற்கு தண்ணீர் பைப்பு மூலம் தண்ணீர் அடித்தார். தொடர்ந்து அங்கு உள்ள வயதான மூதாட்டிகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி முதியோர் உதவி தொகை ரூ. 2,000 உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சித்திரெட்டிபட்டியில் கபசுர குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று அங்குள்ள பெண் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்து கபசுரக் குடிநீர் தயாரிக்கும் பணிகளுக்கு உதவி செய்தார். மேலும் செளவுடார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அமைச்சர்ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.இடஒதுக்கீடு விஷயத்தில் எதிர்கட்சிகள் பொய்பேசி வருகின்றனர். அது உண்மை அல்ல மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.மக்களிடம் செல்வாக்கு பெறாதவர்கள் இதன் மூலம் செல்வாக்கு பெற நினைக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது.

நிச்சயம் உங்கள் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார். வந்தவுடன் 163 திட்டங்களை உங்கள் இல்லம் நாடி நிச்சயம் நாங்கள் வழங்குவோம். ஆகவே இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News