தேர்வு அச்சம் 12 ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை- தந்தை தற்கொலை முயற்சி
திருமங்கலம் அருகே புல்லமத்தூர் கிராமத்தில் பிளஸ்2 மாணவன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை முயற்சி;
தேர்வுக்குப் பயந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மனமுடைந்த தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா புல்லமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிபாபு-உஷாராணி என்ற தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.,பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மகன் சஞ்சய் பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தேர்வு பயம் காரணமாக நேற்று அவனியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சஞ்சயின் அலறல் சத்தம் காரணமாக இதனைப் பார்த்த தாய்மாமன் ராஜபாண்டி உடனடியாக தனது மருமகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி காப்பாற்ற முயன்ற ராஜபாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் சஞ்சய் உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற ராஜபாண்டி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில். தனது மகன் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டு இறந்த தகவலை கேள்விப்பட்ட பழனி பாபு புல்லமுத்தூரில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மகன் இறந்த சோகம் தாளாமல் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புல்லமுத்தூர் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் கூறியதாவது: மாணவர்கள் தேர்வுக்கு பயந்து இதுபோன்ற முயற்சிகளில் இறங்க அவசியமில்லை.தேர்வு என்பது மிக முக்கியம் தான். ஆனால். அதுவே வாழ்க்கை அல்ல. தேர்ச்சி பெற இயலாவிட்டால் அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்த்த வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டுமே தவிர அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.