புரோட்டாவுக்கு மாவு பிசைந்து பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்
திருமங்கலம் 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜம்மாள் புரோட்டா மாவு பிசைந்து நூதன முறையில் பிரச்சாரம் செய்தார்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ராஜம்மாள் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது இப்பகுதியில் அதிமுக ஆட்சி காலத்தில் எந்தவித திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. மேலும் தேவைக்கேற்ப உறவினர்களுக்கு மட்டுமே அதிமுக நகர மன்ற வார்டு உறுப்பினர் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கார்டு குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்குவதாக கூறியுள்ளார். அதனை இப்பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் பெற்றுத் தருவேன் எனக் கூறினார்.
மேலும் சாலை வசதி சாக்கடை வசதி,குறைதீர்க்கும் முகாம் மையம், இ-சேவை மையம், உள்ளிட்ட அத்தியாவசிய அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து வருவேன் என வாக்குறுதி கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் அப்பகுதியில் மாலை நேர உணவகம் கடையில் சற்று நேரம் புரோட்டா கடையில் மாவு தயார் செய்து நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்