செக்கானூரணியில் இருசக்கர வாகனங்கள் மோதல் - ராணுவ வீரர் பலி
திருமங்கலம் அருகே செக்கானூரணியில், இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் வினோத் வயது (26); ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்த வினோத் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புங்ககுலத்தை சேர்ந்த சரவணன் மகன் ஆகாஷ் வயது 17 திருமங்கலத்திலிருந்து பொண்ணமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பொண்ணமங்கலம் பிரிவு அருகே வந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், ராணுவ வீரர் வினோத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான ஆகாஷ். பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆகாஷை, அரசு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து செக்கானூரணி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வினோத் உடலை கைப்பற்றி, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தினர். இச்சம்பவம் குறித்து, செக்கனுரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.