உயிரோடு இருக்கும் முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: ஜெகஜால கணவர்

மதுரை : முதல் மனைவி இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்டு 2ம் திருமணம் செய்த கணவரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-29 15:06 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா (வயது 23). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் பாலகிருஷ்ணன் பணியின் காரணமாக வெளிநாடு சென்று விட்டு கடந்த வருடம் நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக சச்சரவுகள் ஏற்பட்டு மோனிஷா தனது தாய்வீட்டுக்கு திரும்பி பெற்றோருடன் வசித்து வருகிறார்

தற்போது பாலகிருஷ்ணன் தனது மனைவி மோனிஷா இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளமான, பேஸ்புக், வாட்சப்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு தங்களது உறவினர்களை நம்பவைத்து, தனது உறவுக்கார பெண்ணை 2ம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த முதல் மனைவி மோனிஷா அதிர்ச்சியடைந்தார். கணவர் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் புகார் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருள்ள மனைவி இறந்துவிட்டதாக நம்ப வைத்து 2வது திருமணம் செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News