வைகை ஆற்றில் மீட்கப்பட்ட செப்பு விநாயகர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் வைகையாற்றில் செம்பினால் ஆன இரண்டடி உயரம் ஒன்றரை கிலோ எடை கொண்ட விநாயகர் சிலை கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து சிலையே பெற்று வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் சிலையை ஒப்படைத்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் சிலை பத்திரமாக வைக்கப்பட்டது. மேலும் சோழவந்தான் காவல் நிலைய போலீசார் இந்த சிலை ஏதாவது பகுதியில் இருந்து திருடப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா அல்லது ஆற்றிலே சிலை கிடந்ததா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சிலை பற்றி தொல்பொருள் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆற்றில் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.