மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி; ஆணையாளர் கணினி வழங்கல்
மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக கணினிகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வழங்கினார்.;
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக கணினிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமை ஆசிரியர்களிடம் இன்று (03.09.2021) வழங்கினார். மதுரை மாநகராட்சியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் கையடக்க கணினிகள், மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படிப்பு திறனை வளர்ப்பதற்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கும், தொழில் திறனை மேம்படுத்துவதற்கு மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கும், பள்ளிகளில், தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில், மாநகராட்சியின் 14 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 92 கணினிகளை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் செயல் இயக்குனர் மாநகராட்சி ஆணையாளர், வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திருமுருகன், துணை பொது மேலாளர் பிரகாஷ்ராமன், மேலாளர் பிரிஜோ, உதவி மேலாளர் சாமுவேல் எபினேசர், திட்ட அலுவலர் பிரபாகர், அமெரிக்கன் இந்தியன் பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா, தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.