மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது
அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பலரையும் ஏமாற்றி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது
மதுரையில் அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பலரையும் ஏமாற்றி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்கிற பெயரில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். அதன்மூலம் உறுப்பினர்களுக்கு நிதி பங்கீடு செய்து வழங்குவதாக தெரிவித்து, ஏமாற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தில் உறுப்பினராக இருந்த ஈஸ்வரி என்பவர் மதுரையில் உள்ள பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நிறுவன உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பலரிடம் இதேபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்த குற்றப்புலனாய்வு பிரிவினர் தம்பதியினரிடம் பணத்தை பறிகொடுத்த உறுப்பினர்கள் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.