கலாச்சார விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்த ஆட்சியர்
கலாச்சார விழிப்புணர்வு கலைப்பயணத்தை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் என்ற இயக்கத்திற்கான கலாச்சார விழிப்புணர்வு கலைப் பயணத்தை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்வி கல்லாதோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதி பங்களிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மதுரை மாவட்டத்தில் 4 35 441 கல்வி கல்லாதோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 10 859 கல்வி கல்லாதோர்களுக்கான 545 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக 21,700 நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு தேவையான கல்வி கல்லாதோர்களை கண்டறிய கலாச்சார விழிப்புணர்வு கலைப்பயணம் மதுரை மாவட்டத்தில் 27.09.2021 முதல் 06.10.2021 வரை 8 நாட்கள் 24 இடங்களில் (16 பள்ளிகள், 8 பொது இடங்கள்) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம் மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன், பள்ளி ஆசிரியர்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கலைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.