பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
பேருந்துகள் சிக்னலுக்காக நிறுத்தப்படும் சில நிமிடத்திற்கு உள்ளாகவே பேருந்திலிருந்து இறங்கும் சம்பவம் அதிகரித்துள்ளது
மதுரையில் சிக்னலில் நின்ற பேருந்திலிருந்து இறங்கிய பெண் நிலைதடுமாறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரழந்தார்.
மதுரை, சிம்மக்கல் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த, விளாங்குடி பகுதியை சேர்ந்த இந்திரா(44). இவர், வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, சிம்மக்கலில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் மாநகர பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது, பேருந்து பெரியார் பேருந்து பகுதியில் உள்ள கட்டப்பொம்மன் சிலை அருகே பேருந்து சிக்னலுக்காக நின்ற போது, இந்திரா வேகமாக பேருந்திலிருந்து இறங்கிச் செல்ல முற்பட்டார். ஆனால், சிக்னல் கிடைத்தவுடன் பேருந்து ஓட்டுநர் பேருந்தை எடுத்தபோது நிலை தடுமாறிய இந்திரா, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மதுரை மாநகர் போக்குவரத்து போலீசார் மற்றும் திடீர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரை பிடித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பெரியார் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கட்டபொம்மன் சிலை அருகேயும், மேம்பாலத்திலும், பேருந்துகள் சிக்னலுக்காக நிறுத்தப்படும் சில நிமிடத்திற்கு உள்ளாகவே பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அவசர அவசரமாக இறங்கி விடுவதால், இந்த பகுதியில் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், அதேபோல், சிக்னலுக்காக நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய பெண் நிலை தடுமாறி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.