மதுரை அருகே ஊருணிகள் தூர்வாரும் பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
மாநகராட்சி பகுதியிலுள்ள 33 ஊருணிகள் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஊருணிகளில் தூர்வாரப்படும் பணிகளை ஆணையாளர் கா.ப. கார்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 33 ஊருணிகள் உள்ளன. இவற்றில் 10 ஊரணிகள் ஹைடெக் அராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதியுதவியுடன், தானம் அறக்கட்டளையின் மூலம் தூர்வாரப்பட்டு 7 ஊருணிகளில் தற்போது மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊருணிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இதர ஊருணிகள் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மண்டலம் எண்.3 வார்டு எண்.61 அவனியாபுரம் மெயின் ரோடு வில்லாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கண்ணிமார் ஊருணி மற்றும் வார்டு எண்.60 அவனியாபுரம் இராணி மங்கம்மாள் சாலையில் உள்ள வல்லனந்தபுரம் ஊருணி ஆகிய ஊருணிகளை தூர்வாருவதற்கு ஆணையாளர் அனுமதி அளித்து, வல்லனந்தபுரம் ஊருணியை தூர்வாரி ,ஊருணி நடுவில் செயற்கை தீவுகள் அமைத்து, அதில் இயற்கை சூழலை பராமரிக்கும் வகையில் பறவைகள் வந்து கூடுவதற்காக பழ மரக்கன்றுகளை நட்டு வைக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மண்டலம எண்.4 வார்டு எண்.95 புனரமைப்பு செய்யப்பட்ட முத்துப்பட்டி புதுக்குளம் கல்தார் ஊருணியை ஆய்வு செய்து அருகில் உள்ள நூலகத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு விரைந்து பணிகளை மேற்கொள்ளு மாறும், மேலும், ஊருணியை சுற்றி பாதுகாப்பாகவும், முட்புதர்கள் வளராமல் கண்காணித்து வரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, தானம் அறக்கட்டளை நிர்வாகிலோகேஷ், திட்ட தலைவர் த. நகுவீர் பிரகாஷ், உதவி ஆணையாளர்(பொ) சுரேஷ்குமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் சேகர், உதவிப்பொறியாளர்கள்பாபு, முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.