மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு
மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வில் ஈடுபட்டார்.;
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வது வார்டு எண்.76 சிருங்கேரி முத்துப்பாண்டி நகரில் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உபகழிவுநீரேற்று நிலைய பணிகளையும், வார்டு எண்.75 நேதாஜி 4வது தெருவில் ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மண் சாலை பணியினையும், வார்டு எண்.82 வக்கீல் புதுத்தெருவில் ரூ.16.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலைப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண்.76 பழங்காநத்தம் வடக்கு தெரு மற்றும் பாடைப்பட்டி தெருவில் ரூ.10.27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும் என மொத்தம் ரூ.73.47 லட்சம் மதிப்பீட்டில், மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, கட்டுமான பணிகள் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள் முருகேசபாண்டியன், ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் பாபு, உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.