மதுரை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி புதூர் மற்றும் திருப்பாலை ஜி.ஆர்.நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2, புதூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு காலதாமதமின்றி விரைவில் சிகிச்சை மேற்கொண்டு அனுப்புமாறும், மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அருகில் உள்ள சமுதாயகூடத்தில் குடிநீர், இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் ,புதூர் மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, திருப்பாலை ஜி.ஆர். நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடவசதிக்குகேற்ப பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் தினசரி பரிசோதனைக்கு வருபவர்களுக்கு தனியாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்து வருபவர்களுக்கு தனியாகவும் சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார். அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மிகத் தூய்மையாகயும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு கூறினார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, மண்டலம் எண்.2 வார்டு 47 புதூர் ரிசர்வ் லைன் ஏ.ஆர்.லைன் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, வார்டு 34 அண்ணா நகர் உழவர்சந்தை ரோட்டில் ரூ.9.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், வார்டு எண்.25 ஜி.ஆர்.நகரில் உள்ள மயானத்தில் ரூ.7.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் சங்கிலிராஜன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.