நடிகர் சூரி இல்ல திருமண நகை திருட்டு வழக்கில் இளைஞர் கைது

நடிகர் சூரி, சகோதரர் இல்லத் திருமண விழாவில் 10 சவரன் நகை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-14 11:18 GMT

நகை திருடிய வழக்கில் பாேலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷ்.

நடிகர் சூரி-யின் சகோதரர் இல்ல திருமண விழாவில் திருடப்பட்ட 10 பவுன் நகை தொடர்பாக கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவர் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைகளை திருடி விற்றதாக, கீரைத்துறை போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி, சகோதரர் இல்லத் திருமண விழா கடந்த 9-ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும், திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் 12 தேதியன்று புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த கீரைத்துரை காவல் துறையினர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது திருமண நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சந்தேகிக்கும் படி சுற்றி திரிந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, கீரைத்துரை காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீடியோ காட்சியில் இருந்தவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மணமகள் அறையில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடியது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து, 10 சவரன் நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் மீது மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசியல், சினிமா, தொழிலதிபர்கள், அதிகாரிகள் போன்ற முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் டிப்டாப்பாக உடையணிந்து தெரிந்த நபர் போல தன்னை அறிமுகப்படுத்தி பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திருடியது தெரிய வந்தது. இதுவரை இவர் மீது 18-ற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News