மதுரையை குளிர்வித்த மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
மதுரை நகரிலும், சுற்றுப்பகுதிகளிலும் இன்று மாலை, பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.;
மதுரை மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்தது. இதனால், வாய்கால் வழியாக மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது. புறநகர்ப்பகுதியில் பெய்த மழையால், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இன்றுமாலை மதுரை அண்ணாநகர், வண்டியூர், மேலமடை, கே.கே.நகர், கோரிப்பாளையம், புதூர், கருப்பாயூரணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் பெருக்கெடுத்து, சாக்கடை நீரூடன் வீடுகளை சூழ்ந்தது. மேலும், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மருதுபாண்டியர் தெரு, தாழை வீதி பகுதியில் மழைநீர் தேங்கியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால், மதுரை நகர் குளிர்ந்துள்ளது.