மதுரையில் பல பைக்குகளை திருடிய பலே ஆசாமி கைது
மதுரையில் தொடர்ந்து திருட்டு போகும் பைக்குகளை மீட்க போலீசார் எடுத்த நடவடிக்கையில் பலே ஆசாமி கைது செய்யப்பட்டார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அண்ணாநகர், மதிச்சியம், திருமங்கலம், அண்ணாநகர் பகுதிகளில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பைக்குகள் திருடப்பட்டன.
இது தொடர்பாக, மதுரை நகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், மதுரை நகர துணை ஆணையர் ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தொடங்கியது.
அதில், மதுரை நகரில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் முருகனை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து, திருட்டுபோன இரு சக்கர வாகனங்களை மீட்டனர்.