கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில், மரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் அரசு அதிகாரிகள்
மரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் அரசு அதிகாரிகள்:
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நினைவாக மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு அடுக்குகளை கொண்ட கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் இதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்யப்பட்ட நிலையில் அங்கு இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.
மேலும் அங்கு 500க்கும் மேற்பட்ட மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்த காரணத்தால் கட்டுமான பணிக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்திற்கு மாற்ற பணியானது தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
பழமையான மரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட இந்த முயற்சி சுற்றுச்சூழல் ஆர்வலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.