வைகையில் கலக்கும் கழிவுநீர்; ரூ.74 கோடி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
வைகையில் கான்கிரீட் கால்வாய்கள் அமைக்க ரூ.74 கோடி திட்டத்தை உடனே ஒப்புதல் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பைல் படம்.
மதுரை வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க செல்லுார் கண்மாயிலிருந்து ஆறு வரை கான்கிரீட் கால்வாய் அமைக்க ரூ.74 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் கிடைக்காததால், திட்டம் நிறைவேற்றப்படாமல் கழிவுநீர் தொடர்ந்து ஆற்றுக்குள் விடப்படுகிறது.
செல்லுார் கண்மாய் நிரம்பினால், பந்தல்குடி கால்வாய் மூலம் உபரிநீர் 2.6 கி.மீ., துாரத்திலுள்ள வைகை ஆறு செல்லும். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த மண் கால்வாயை எளிதாக உடைத்து வீடுகளின் கழிவுநீரை உள்ளே விடுகின்றனர்.
இக்கழிவுநீர், கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. வெள்ளம் வரும் வாய்க்கால்கள் வீடுகளின் கழிவுநீர் வாய்க்கால்களாக மாறி வருகின்றன. மீனாம்பாள்புரம், கட்டபொம்மன்நகர், செல்லுார், ஜம்புரோபுரம், அகிம்சாபுரம் மார்க்கெட் கழிவுநீர் அனைத்தும் வைகையில் கலக்கிறது.
மாநகராட்சி கழிவுநீரை மறுசுழற்சி செய்தால் வைகை மாசடையாது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் குழி அமைத்து கழிவுநீரை மறுசுழற்சி செய்கின்றனர். பந்தல்குடி, செல்லுார் பகுதிகளில் குழி அமைத்து கழிவுநீரை மறுசுழற்சி செய்வதில்லை.
மண் கால்வாயை கான்கிரீட்டாக அமைத்தால் எளிதில் உடைக்க முடியாது. வீடுகளின் கழிவுநீர் கால்வாய் வழியாக ஆற்றுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.
இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.74 கோடியில் கான்கிரீட் கால்வாய் அமைக்க மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு விரைந்து அனுமதி வழங்கி நிறைவேற்றினால் வைகையில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளித்தால் வைகை தொடர்ந்து மாசடைவதை தடுக்க முடியும் என தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.