மதுரை கிழக்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள்: பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு

கோரிக்கை மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும்

Update: 2021-08-11 16:35 GMT

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில், மாநகராட்சியாக விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில், விடுபட்டுள்ள புதை சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், சாலை வசதிகளை மேம்படுத்தும் திட்டம் மற்றும் தெருவிளக்கு அமைக்கும் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவுப் படுத்தப்படும் என வணிகவரி  மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்களிடன் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அமைச்சர்  பி.மூர்த்தி கூறியதாவது:

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கடந்த 10 நாட்களாக கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு வருகிறேன். இப்பகுதி மதுரை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதனால், இப்பகுதி மக்கள் சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் தெருவிளக்கு அமைக்க கோரி மனு அளித்துள்ளனர். மேலும், முதியோர் உதவிதொகை, விதவை உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி இருக்கின்றனர்.

கடந்த 10 வருடங்களாக இதுபோன்ற அடிப்படை வசதிகளை பெறுவதற்கு கூட பொதுமக்கள் போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர், இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். புதை சாக்கடை வசதி அமைக்கும் பொழுதே குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, பின்பு சாலை வசதி மற்றும் தெருவிளக்கு அமைக்கும் பணியும் உடனடியாக மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும் என அவர்  தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, லேக் ஏரியா, டி.எம்.நகர், பொன்மணி கார்டன், ஆதீஸ்வரன் நகர், உத்தங்குடி, ஜே.சி.பி.கார்டன், ஸ்ரீராம் நகர், குருநகர், உலகனேரி, ராஜீவ் நகர், வளர் நகர், இலந்தைக்குளம் நகர், வி.என்.சி.டி.நகர், அம்பலகாரன்பட்டி, மங்களக்குடி மற்றும் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில், அமைச்சர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் .ஆ.வெங்கடேசன் மற்றும் மதுரை வடக்கு வட்டாட்சியர் சுரேஷ உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News