மதுரை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி வழங்கல்
சாலையோர வியாபாரிகளுக்கு புதிய தள்ளு வண்டிகளை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வழங்கினார்
மதுரை மாநகராட்சிசாலையோர வியாபாரிகளுக்கு புதிய தள்ளுவண்டிகளை,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்:
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு புதிய தள்ளுவண்டிகளை, அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர்.
மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார இயக்கம் ஆகிய மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நவீன 4 சக்கர தள்ளுவண்டிகள் வழங்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பதிவு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனை மண்டலம், விற்பனை அல்லாத மண்டலம் என பிரித்து இவர்கள் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு வங்கி மூலம் கடன் உதவி வழங்க ஏதுவாக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று காலங்களில் ரூ.1000 வீதம் நிவாரணத்தொகை முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்த சாலையோர விற்பனையாளர்கள் 12604 அதில் அடையாள அட்டை 8649 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கு அமைக்க ரூ.6.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்படி, மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நவீன 4 சக்கர தள்ளு வண்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஒரே இடத்திலோ அல்லது பல்வேறு பகுதிகளுக்கோ சென்று பொருள்களை விற்பனை செய்யமுடியும்.
இது எளிதில் தள்ளிச் செல்லக்கூடிய, வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறியது மற்றும் பெரியது என இரு வகையான வண்டிகள் வழங்கப்படுகிறது. இந்த வண்டிகளில் பொருள்களை இருப்பு வைக்கும் வசதி, வெயில் மற்றும் மழையிலிருந்து பொருள்களை பாதுகாக்கும் வகையில் மேற்கூரை வசதி, மற்றும் எளிதில் சேதமடையாத வகையில் அலுமினிய தகடால் வடிவமைக்கப் பட்டுள்ளது.ஒரு சிறிய வண்டியின் மதிப்பு ரூ.45000 பெரிய வண்டியின் மதிப்பு ரூ.95000 ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பெரிய வண்டிகள் 263 , சிறிய வண்டிகள் 980 என மொத்தம் 1243 வண்டிகள் தயார் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 100 பேருக்கு, குறிப்பாக ஆதரவற்ற விதவைப்பெண்கள், மாற்றுதிறனாளி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
இறுதியில், அனைத்து சாலையோர வியாபாரிகளிடம் உறுதிமொழி ஏற்கப்பட்டது, சாலையோர வியாபாரிகள் ஆகிய நாங்கள், அரசின் சட்ட விதிகளின் படி வியாபாரம் செய்வோம். மதுரை மாநகராட்சியால், சாலையோரம் வியாபாரம் செய்ய தகுந்த இடம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்வோம்.
மதுரை மாநகராட்சியால் வியாபாரம் செய்ய தகுந்த இடமல்ல என்று அறிவிக்கப்பட்ட பகுதியில், வியாபாரம் செய்ய மாட்டோம். சாலையோரங்களில் பொது மக்களுக்கோ போக்குவரத்திற்கோ எந்தவித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்வோம். வியாபாரம் நடத்தும் பகுதிகளில் உருவாகக்கூடிய திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை முறையாக பாதுகாக்கும் வகையில் வியாபாரம் செய்வோம். சுத்தமான முறையில் தரமான சுகாதாரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம் என்று உறுதி கூறுகிறோம் என்று அனைத்து சாலையோர வியாபாரிகளிடம் உறுதி மொழி ஏற்கப்பட்டு, வண்டிகள் ஒப்படைப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் ராஜா, உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், உதவி ஆணையாளர் பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், சாலையோர வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் சுகாதார அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.