அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்- உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது.;
தமிழக அரசு அரசுக்காக வழக்காட அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யும் பொழுது உயர்நீதிமன்ற உத்தரவின்படி வெளிப்படைத் தன்மையாகவும், அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு செய்ய கோரி வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது.
மதுரையைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "தமிழக அரசு கடந்த மே 13ம் தேதி அரசாணை வெளியிட்டது அதன்படி 17 வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்தது.ஆனால், உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை முறையாக பின்பற்றி வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறவில்லை.
கடந்த 2018 உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் ,இது குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் , உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் அரசாணையை வெளியிடாமல் 2019ஆம் ஆண்டு புதிய அரசாணையை அப்போதைய அரசு வெளியிட்டது. தற்போதும் , அரசியல் நபர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. எனவே, அரசு புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் வெளிப்படைத்தன்மையாகவும், அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகள் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் வழக்கறிஞர்களின் முந்தைய விபரங்கள் காவல்துறை இணையதளத்தில் வெளியிடவும், வழக்கறிஞர்களின் படிப்பு தகுதி குறித்த விவரங்களை தமிழ்நாடு பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.ஜி.சண்முகசுந்தரம் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராக, தற்போது வழக்கறிஞர்கள் நியமனம் முறைப்படி உயர் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றியே நியமனங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் அரசுக்காக வழக்காட கூடிய வழக்கறிஞரை நல்ல தகுதி உடையவராக தேர்வு செய்ய வேண்டும் , என்றும் அதேபோல வழக்கறிஞர்கள் ஏதோ ஊதியத்திற்காக வேலை செய்கிறோம் என்று இல்லாமல் இந்த வழக்கில் அரசுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் வாதாட கூடியவராக இருக்க வேண்டும் என்ற வகையில் தேர்வு செய்யலாம் என்று, கருத்து கூறிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளனர்..