அலங்காநல்லூர் அருகே மது விற்பனையை தடை செய்ய கிராமக் கூட்டம் வலியுறுத்தல்
பள்ளி அருகிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்;
அலங்காநல்லூர் அருகே சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனை தடுக்க வேண்டியும், மிகவும் பழமை வாய்ந்த பழுதடைந்த நிலையில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்று பாலத்தை சரி செய்து தர வேண்டும் மற்றும் கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி சுற்றுச்சுவர் ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டி தமிழக அரசு மற்றும்கொண்டையம்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும் தெரிவித்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கிராம இளைஞர்களும் கலந்து கொண்டனர்
பின்னர் பேசிய கிராம முக்கிய பிரமுகர்கள் கொண்டையம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது .
மாலை மற்றும் இரவு வேளைகளில் பெண்கள் பள்ளிக்கூடம் பகுதிகளில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், பள்ளி வளாகத்திலேயே மது கஞ்சா போன்ற போதை வஸ்துகளை இளைஞர்கள் பயன்படுத்தி வருவதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
ஆகையால் ,அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் சுற்று சுவர் அமைத்து தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் சிலமடைந்துள்ள முல்லை பெரியார் பாசன கால்வாய் பகுதியை மராமத்து செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்,
இது சம்பந்தமாக விரைவில் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட போவதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.