மதுரை மாவட்டத்தில் விஜயதசமியையொட்டி பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம்
விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையின்படி கோயில்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது;
மதுரையில் விஜயதசமியையொட்டி கோவில்களில் இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதற்காக குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை, கோவில்கள் மற்றும் வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் விஜயதசமி. தொடர்ந்து கல்வி , கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள்.
மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு , இசைக் கருவிகள் , நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி , புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யா ரம்பம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தான அ..,ஆ.. ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தும், நாவில் தேன் வைத்து எழுத்துகளை உச்சரிக்க செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.