மதுரையில் பல்வேறு நலத்திட்டங்கள்: அமைச்சர்கள் துவக்கம்
வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் அபிவிருத்தி உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;
மதுரை மாநகராட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில்அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி புதிய பள்ளிகட்டிடம் திறப்பு விழா,திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய இலகுரக வாகனங்கள் பயன்பாட்டுற்கு கொண்டு வருதல் மற்றும் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி அனுப்பானடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அனுப்பானடி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள புதிய இலகுரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நேற்று (16.07.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி அனுப்பானடியில், செயல்படும் இப்பள்ளி 1920 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2007 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி வளாகத்தில், ஆரம்பப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. சுமார் 450 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள் என, சுமார் 20 நபர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காணொலி காட்சி மூலம் பள்ளியினை மேம்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வேலம்மாள் மருத்துவமனை சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.47.5 லட்சமும், நமக்கு நாமே திட்டத்தின் அரசின் நிதியிலிருந்து ரூ.47.5 லட்சமும் சேர்த்து ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 7 வகுப்பறைகள், 1 நவீன ஸ்மார்ட் வகுப்பறை தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை உடன் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியினை, அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள 15வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் 40 இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள இலகுரக வாகனங்களை கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார்கள்.
தொடர்ந்து , மதுரை மாநகராட்சி பகுதியான வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரினை அதிகரிக்கும் பொருட்டு வண்டியூர் கண்மாய் தூார்வாரப்பட்டு, தண்ணீர் நிரந்தரமாக சேமித்து வைக்கப் பட்டுள்ளதால் சுற்றுப்பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி வண்டியூர் கண்மாயினை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாய் 550 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மதுரை மாநகர மக்களுக்கு ஒரு பொழுதுபோக்குதளமாக அமையும் வகையில் கண்மாயின் படுகையை பலப்படுத்தவும், கண்மாயில் படகுசவாரி வசதிகள் ஏற்படுத்துதல், கண்மாயின் மேற்குப்புறம் மற்றும் வடபுறத்தில் இருசக்கர மிதிவண்டி பாதை அமைத்தல்
நடைபயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் , மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா வாசுகி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மாநகராட்சிப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் திருமலை காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் .சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர் (வாகனம்) (பொ) ரிச்சார்டு, உதவிப்பொறியாளர் அமர்தீப், மாமன்ற உறுப்பினர்கள் பிரேமா , கார்த்திகேயன்,துரைப்பாண்டியன், கதிரவன் ,ராஜா , மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.