பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை
பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
மனைவியின் பிறந்தநாளில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்த கணவன் - வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி மகள் என குடும்பமே தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து (வயது42) இவர் கார்ப்பென்டராக பணிபுரிந்துவந்தார். இவர் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து மரவேலைகளை பார்த்துவந்தார்.இவர் தனது மனைவி ஜாக்லின் ராணி (36) மகள் மதுமிதா (12) ஆகியோருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், காளிமுத்துவின் மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காளிமுத்து வாட்ஸ்அப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்டேடஸ் வைத்துள்ளார்.
இதையடுத்து, காளிமுத்து கூடல்நகர் ரயில்வே நிலையத்திற்கு சென்று வாட்ஸ்அப்பில் விடை பெறுகிறேன் என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு அங்கு தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இதனிடையே, மதியம் 2 மணிக்கு மேல் காளிமுத்துவின் மனைவிக்கு அவர்களது உறவினர் போன் செய்த நிலையில் அவர் எடுக்கவில்லை இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள் வீட்டுகதவை தட்டியுள்ளனர்.
அப்போது வீடு உள்பக்கத்தில் பூட்டப்பட்டிருந்த நிலையில் ,ஜன்னல் வழியாக பார்த்தபோது காளிமுத்துவின் மனைவி ஜாக்குலினும் மகள் மதுமிதாவும் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர் .
இதனையடுத்து, செல்லூர் காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மனைவியின் பிறந்தநாளில் மனைவி மகளுடன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய சில மணி நேரத்தில் 3 பேரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,தற்கொலைக்கான காரணம் குறித்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.