மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்த பழமையான மின்தூக்கி
மதுரை மருத்துவக்கல்லூரியில் 1967-ஆம் ஆண்டு இந்த மின்தூக்கி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது
மருத்துவக்கல்லூரியில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ள மின்தூக்கி பழுதடைந்ததையடுத்து, அதை சீரமைக்க ரூ. 20 லட்சம் மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. இந்த மின்தூக்கியை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தர்கள்.
பின்னர்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: மதுரை மருத்துவக்கல்லூரி தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த பழமையான மருத்துவகல்லூரிகளில் ஒன்று. இக் கல்லூரியில்தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மதுரை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி பழுதடைந்து விட்டதால், அதனை மாற்றித்தர மருத்துவ மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று, தற்பொழுது புதிய நவீன மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரியில் 1967-ஆம் ஆண்டு மிகவும் பழமையான மின்தூக்கி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்சமயம், இந்த மின்தூக்கி அடிக்கடி பழுதிற்கு உள்ளாகி சரிசெய்ய உரிய உபரிபொருட்கள் சந்தையில் கிடைக்கப்பெறாமல் மின்தூக்கி பராமரிப்பில் குறைபாடு ஏற்பட்டு மின்தூக்கியில் செல்லும் பயணிகளுக்கு சிரமம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும் சூழ்நிலை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், மதுரை மருத்துவ கல்லூயில் மின்தூக்கிக்கு ரூபாய் 18 இலட்சம் மற்றும் மின்பராமரிப்பு பணிகளுக்கு ரூபாய் இரண்டு இலட்சம் என மொத்தம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் மின்தூக்கி சிறப்பு பழுதுநீக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் 8 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர்கள் இருவரும் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மற்றும் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர் .செந்தில்குமாரி , மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் எ.ரத்தினவேல் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் (பொதுப்பணித்துறை) .எஸ்.இரகுநாதன் மதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளர் (பொதுப்பணித்துறை) .கே.பி.சத்யமூர்த்தி மின்பொறியாளர் (பொதுப்பணித்துறை) .எஸ்.இரணியன் மற்றும் செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) கே.அய்யாசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.