மழை பெய்தால் குளம் போல மாறும் தெருக்கள்: மதுரை மாநகராட்சி கவனம் திரும்புமா?
மதுரையில், மழை பெய்தால் பல தெருக்கள் குளமாக மாறும் நிலை உள்ளது.;
மதுரை நகரில் எப்போது மழை பெய்தாலும், சாலைகள் குளமாக மாறி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
மதுரை மாநகராட்சி, 36, 37 வார்டுகளான, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோயில் தெரு, அன்பு மலர் தெரு, வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, மருதுபாண்டியர் வீதி, கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் குருநாதன் தெரு, வள்ளலார் தெருக்களில், மழை பெய்தாலே, சாலையில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
வீரவாஞ்சி தெருவில், கடந்த ஐந்து நாட்களாக, கழிவு நீர் பெருகி, துர்நாற்றத்துடன், சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சித்திவிநாயகர் கோயில் தெரு வழியாக இரு சக்கர வாகனமோ, பாதசாரிகள் நடந்து செல்ல அஞ்சும் அளவுக்கு, பள்ளமாக உள்ளது.அதுமட்டும் அல்லாமல், பாதாள சாக்கடை பணிக்கு, மதுரை மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்டு, அதுவும் சரிவர மூடப்படாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில், அவ்வழியாக பயணிக்க பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
இது குறித்து, மதுரை மாநகராட்சி கவனத்துக்கு, பொதுமக்கள் கொண்டு சென்றும், சாலைகளை சீரமைக்க நடவடிக்கையானது, மந்த நிலையிலே உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், தனி கவனம் செலுத்தி, சாலையில் மழை நீர், கழிவு நீர் தேங்குவதை தடுக்க, பொதுமக்கள் கோரியுள்ளனர்.