தீபாவளி பண்டிகைக்காக திருநெல்வேலி யிலிருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை

நெல்லையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் வசதிக்காக தீபாவளி சிறப்புரயில் விடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது

Update: 2022-10-15 10:15 GMT

பைல் படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிற தமிழர்களின் பண்பாடு உண்மையாக்கிக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான பணிகளை செய்வதற்கு உடல் உறுதியும், கூடுதலாக உழைக்கும் பழக்கமுள்ள வட இந்தியர்கள் குறிப்பாக பீஹார், நேபாளிகள் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு உழைப்புக்கு நல்ல மதிப்பு கிடைத்தது. சிறு சிறு குழுக்களாக பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு குடும்பத்துடன் இங்கே இடம் பெயர்ந்தனர். 

பிறது இரண்டு மூன்று தலைமுறைகளைக் காணும் வரையில் தங்களை இங்கேயே நிலை நிறுத்திக்கொண்டனர். அண்மைக் காலமாக கட்டிடம், விசைத்தறி, பின்னலாடை தயாரிப்பு, உணவகங்கள், பெரும் ஜவுளி நிறுவனங்கள் வரை பரவிவிட்டது இவர்களது பணித்தேவை.  இவர்களுக்கு, தங்குமிடம், உணவு இவற்றுடன் நியாயமான ஊதியமும் தாராளமாகக் கிடைப்பதுதான் முக்கிய காரணம். தமிழகத்தில் மட்டும் வட இந்தியர்கள் சுமார் 20 -லட்சம் பேர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக இங்கு வசிக்கும் ராஜஸ்தான், பீகார், உ.பி போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கட்டாயமாகச் சென்று தங்களது சொந்த ஊர்களில் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களது பயணத்தேவைக்காக ரயில்வே நிர்வாகம் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் தமிழகத்திலிருந்து இயக்கி வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி - தானாப்பூர் சிறப்பு ரயில் (06190) அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 25 ஆகிய செவ்வாய்க்கிழமை களில் அதிகாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, பழனி, கோயம்புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக்கிழமை களில் மதியம் 02.30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தானாப்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக பயணித்து திங்கட்கிழமை அதிகாலை 04.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தானாப்பூர் செல்லும் சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கல்கலூர், பீமாவரம் நகர், தனுகு, நீடாவாலு, ராஜமுந்திரி, சாமல்கோர்ட், துனி, அனகாபள்ளி, துவாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனியகுடா, கேசிங்கா, டிட்லகார், பாலங்கீர், பர்கர் ரோடு, சம்பல்பூர், ஜர்சுகுடா, ரூர்கேலா, சக்கரத்தார்பூர், பருலியா, ஜோய்ச்சண்டிபகர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசித், ஜாஜா, கியூல், மொகமெக், பக்தியார்பூர் பாட்னா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தானாப்பூர் - திருநெல்வேலி ரயில் கோயம்புத்தூர், போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்பட மாட்டாது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News