பணியின் போது பாதுகாப்பு கட்டாயம்: மேயர் வலியுறுத்தல்
அனைத்து பணியாளர்களும் தங்களது பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்;
துப்புரவுப் பணியின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் வலியுறுத்தல்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றுவது தொடர்பாக, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதித்தல், சாலை அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது, களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் தங்களது பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும். தொழிற்சங்கங்கள் தங்கள் பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியாற்றிட அறிவுறுத்திட வேண்டும்.
பிற நேரத்தை தவிர்த்து பணி நேரத்தில் மட்டுமே தங்களது பணியினை மேற்கொள்ள வேண்டும். களப்பணியின் போது, சம்பந்தப்பட்ட பணியின் மேற்பார்வையாளர் பணி நடைபெறும் இடத்தில் இருந்து கண்காணித்திட வேண்டும். மேலும், ஒப்பந்ததாரர்கள் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. எனவே,பணியின்போது அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார் மேயர்.
இக்கூட்டத்தில் ,துணை மேயர் தி.நாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, பாக்கிய லெட்சுமி, பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.