மதுரையில் உணவக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
மதுரையில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள துர்கா என்ற உணவகத்தில், காமராஜபுரத்தை சேர்ந்த வாசுதேவன், வசந்தன், சதிஸ், செல்வகுமார் ஆகிய 4 பேரும் சாப்பிட வந்துள்ளனர். இதனையடுத்து, உணவகத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, உணவகத்தில் மது அருந்தகூடாது என உணவகத்தின் ஊழியர் கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த நான்கு பேரும் உணவக ஊழியரான முனீஸ்வரன் என்பவரை வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த உணவக ஊழியர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் பட்டபகலில். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சமூக விரோதிகள் நடமாடகூடிய நிலையில் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.