தற்கால திரைப்படங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது : முன்னாள் அமைச்சர் சீறல்..!
தற்கால திரைப் படங்கள் மது, துப்பாக்கி, கத்தி என்று இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை தெரிவித்துள்ளார்.
வாடிப்பட்டி:
மதுரை மாநகர் மாவட்டம், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர்.107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பரவையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பரவை பேரூர் கழக செயலாளர் சி.ராஜா தலைமை தாங்கினார். பகுதி கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, முத்துவேல், சோலைராஜா, விளாங்குடி சித்தன், நாகமலை, தங்கவேலு, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் கலாவதி ராஜா வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழகப் துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் குமார்,முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர் சொல்லூர் கே.ராஜு ஆகியோர் பேசினார். இதில்,
செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:-
இருந்தாலும், மறைந்தாலும் இவர் பெயரை சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் பேச வேண்டும் என்று பாடலுக்கு ஏற்றவாறு, புரட்சித்தலைவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும், அவரது புகழ் நினைத்துக் கொண்டு வருகிறது .
புரட்சித்தலைவர், பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியைத் தொடங்கினார். எடப்பாடியார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் ஏழாவது இடத்திலும்,இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார் .
இளம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 8 கிராம் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், திமுக அதை ரத்து செய்து விட்டனர். அதேபோல், எடப்பாடியார் உருவாக்கிய 2000 அம்மா மினி கிளினிக்கை ரத்து செய்துவிட்டனர்.
மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாமல் இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமையை 7,53,086 கடன் சுமையை ஆக்கியுள்ளனர். எடப்பாடியார் ஆட்சியில், பொருளாதார மாநிலங்களாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது 15.7 சகவீீத ஜிடிபி பங்களிப்பு கொண்டு மகாராஷ்டிரா முதாவது இடத்திலும், 9.2 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்டு உத்திரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், 9.1 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்ட தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக, 14 இடத்திலிருந்த உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் முன்னேறி உள்ளது.
திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால், ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல், ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஸ்டாலின் வளர்ச்சி அடைய ஐம்பது ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி ஐந்தே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார்.
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னமும் 2ஜி அலை வரிசையில் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை, இதில், பிஜேபி நாடகம் ஆடுகிறதா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக பின்னுக்கு சென்றுள்ளதாக கூறி வருகிறார்கள். அதிமுக வலுவான இயக்கம், யாராலும் வீழ்த்த முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு மூன்று சதவீதம் தான் வித்தியாசம் தற்போது திமுகவிற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறுபான்மை மக்களிடத்தில் அதிமுக வரவேற்பு ஆகியவற்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அதிமுக பெறும். பிஜேபி கனவு பகல் கனவாகத்தான் போகும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஊழலுக்கு எதிராக மதுரையில் கட்சி தொடங்கினார். இன்றைக்கு ஒரு சீட்டுக்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஊழலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத்துறை மூலம் கொண்டாடினர்.
அதில், ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்ற போதும் வெறும் ஆயிரம் பேர்தான் அதில் பங்கேற்றனர். இதில், பேசிய உச்சநடிகர் புரட்சித்தலைவர் வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக கூறுகிறார்.
1971 ஆம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித்தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, கருணாநிதி பேசும்பொழுது அவர் எட்டாவது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சிதலைவர் என பேசினார்.
அப்போது முரசொலியில் கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ளவேண்டும். இப்படிப் பேசும் நடிகர்கள் எல்லாம் அவர்கள் படங்களில் எல்லாம் மதுவை புகுத்தி, அதன் மூலம் இன்றைக்கு மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
தனது திரைப்படங்களில் மூலம் இளைஞர்களை நல்வழியில் கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர்.ஆனால், தற்போது உள்ள நடிகர்கள் தங்களது படங்களில் துப்பாக்கி கத்தி என்று இளைஞர்களை சீரழித்து வருகின்றனர். இந்த 107 பிறந்த நாள் விழாவில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியாருக்கு வெற்றியை பெற்று தருவோம் என சூளுரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.