ராஜீவ் கொலை வழக்கு கைதிக்கு மதுரையில் சிகிச்சை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. ரவிச்சந்திரன் அவரது தாயார் ராஜேஸ்வரி தங்கியுள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் பரோல் காலத்தை இரண்டு முறை தமிழக அரசு நீடித்து வரும் 15ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் இன்று ரவிச்சந்திரனுக்கு காலை திடீரென நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது
இதனையடுத்து சூரப்பன்பட்டியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரனுக்கு மேல்சிகிச்சை மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.
மதுரை மருத்துவமனை அவசர வார்டு பிரிவில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்கள் இரத்த அழுத்தம், சிறுநீர், சளி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
ரவிச்சந்திரன் மருத்துவபரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவபரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் அளிக்கும் பரிசோதனை முடிவை பொறுத்து பரோல் நாட்களை நீட்டிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.