மதுரையில் சாலைகளில் குளம் போல காட்சியளிக்கும் பள்ளங்கள்: மாநகராட்சி கவனிக்குமா ?
மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது;
மதுரை மாவட்டத்தில், தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மதுரை அருகே சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், பரவை, திருமங்கலம் ,அழகர் கோவில், கருப்பாயூரணி, மேலூர், ஒத்தக்கடை, கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் மழை நீர் தேங்கி பள்ளங்களாகக் காட்சியளிக்கின்றன. .
மதுரை நகரில், பாதாள சாக்கடை பணிக்காக, மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், கோமதிபுரம் ,ஜூபிலி டவுன், வண்டியூர், யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் இருப்பதால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி சாலையிலே பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் இடையூறாக உள்ளது.
அத்துடன், இரு சக்கரவாகனத்தில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.. நான்கு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர், துணை மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ,மதுரை நகரில் சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.