மதுரை தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.;
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான, மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான திருமொழி திருவாய்மொழி பகல்பத்து இராபத்து உற்சவ விழா கடந்த 3ம் தேதி தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரசன்ன பகல் பத்து உற்சவ விழாவை முன்னிட்டு, அருள்மிகு வெங்கடாசலபதி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தை தினமும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்த நிகழ்வும், அதனைத் தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் பெருமாள் முன்பு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் பாடப்படும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது . இந்நிலையில், விழாவின் சிறப்பு நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.
இதனையொட்டி, மங்கள வாத்தியங்கள் மற்றும் தீவட்டி முன் செல்ல அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சகல பரிவாரங்களுடன் பரமபத வாசலில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து, பெருமாள் கோவிலை வலம் வந்தும் பிறகு சயன் கோல அலங்காரம் கண்டருளியும் அருள்பாலித்தார். விழாவில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. எனினும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி காலை 7 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி கோவிந்தா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் மற்றும் வெளிபுறம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.