மதுரை செய்திகள்: கோவில் காவலாளியை தாக்கிய வியாபாரி கைது, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
மதுரையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த செய்தி தொகுப்பு;
திருப்பரங்குன்றத்தில் கோவில் காவலாளி மீது தாக்குதல்: தேங்காய் பழ வியாபாரி கைது:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் நாகராஜன் 58. இவர் பணியில் இருந்த போது ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராஜா என்ற ராஜ்குமார் கோவில் கழிவறைக்கு சென்றுள்ளார். இவர் சன்னதிதெருவில் தேங்காய்பழ கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரை காவலாளி நாகராஜன் கழிவறை பக்தர்களுக்குரியது தாங்கள் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஆக்கிரமடைந்த ராஜா காவலாளி நாகராஜனை ஆபாசமாக பேசி கையால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து நாகராஜன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ராஜாவை கைது செய்தனர்.
பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் டிராவல்ஸ் செக்கர் மீது தாக்குதல்: டிரைவர் மகனுடன் கைது:
திருப்புவனம் சேதுபதி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கேரளா செல்லும் தனியார் பேருந்தில் செக்கராக வேலை பார்க்கிறார் .இந்த பேருந்தின்ஓட்டுநர் காளவாசல் இந்திரா நகரை சேர்ந்த மதியழகன் 53 .இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குள் புகுந்த டிரைவர் மதியழகன் அவரது மகன் கோபிநாத் இருவரும் செக்கர் பாலசுப்பிரமணியை ஆபாசமாக பேசி கையாலும் கத்தியாலும் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணி திடீர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய டிரைவர் மதியழகன் 53 அவர் மகன் கோபிநாத் 24 ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற கணவர் மனைவியை வழிமறித்து தாக்குதல்: வாலிபர் கைது:
மதுரை, முத்து பட்டி ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் மணிகண்டன். முத்துப்பட்டி வீரமடையான் நான்காவது தெருவை சேர்ந்தவர் விஜய்சேகர். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மணிகண்டனின் வீட்டுக்குள் புகுந்து விஜய்பாபு என்பவர் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் செய்வதற்காக மணிகண்டன் அவரது மனைவியுடன் சென்றார். அவர்களை வழிமறித்த விஜய்பாபு, விஜய்சேகர், விஜய்பாஸ்கர் மேலும் சிலருடன்சேர்ந்து ஆபாசமாக பேசி கல்லாலும் மரக்கட்டையாலும் தாக்கினர்.இது குறித்து மணிகண்டன் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து விஜய்பாபுவை கைது செய்தனர்.
மாநகராட்சி நீச்சல் குள மேலாளர் மீது தாக்குதல்: 13 வாலிபர்கள் கைது
வாகைக்குளம் சக்கரத்தாழ்வார் நகரச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் பிரேம்குமார். இவர் டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தின் மேனேஜர் ஆவார். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற 13 வாலிபர்கள் நீச்சல் குளத்தின் கதவுகளை பைக்கால் மோதி சேதப்படுத்தினர்.
பின்னர் அத்துமீறி உள்ளே புகுந்து மேலாளர் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பிரேம்குமார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவர் மீது தாக்குதல் நடத்திய மனோஷ், விஷ்வா, காமாட்சிராஜன், விஷனு வர்த்தன், சரவணகுமார் உட்பட 13 வாலிபர்களை கைது செய்தனர்.
கீரைத்துறையில் பணம் வைத்து சூதாட்டம்: ஆறு பேர் கைது:
மதுரை , அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவல் பேரில் கீரைத்துரை உதவி ஆய்வாளர் செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய மேல அனுப்பானடி பாண்டி 47, கருப்பசாமி 57, ஆறுமுகம் 49, காமராஜர் புரம் பகத்சிங் தெரு செந்தில் ,என் எம் ஆர் மெயின் ரோடு ஜெயராம் 41 ,முருகன் 58 ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.