ஆணையூரில் நகர அமைப்பு அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்
ஆனையூர் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4198233- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் ஆனையூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தை, தமிழ்நாடு முதலமைச்சர், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி பார்வையிட்டு தெரிவித்தது: தமிழ்நாடு முதலமைச்சர், பதவியேற்ற நாள் முதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்களை படிப்படியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், மதுரை மாவட்ட நகர் ஊரமைப்புத் துறைக்கு ரூ.5 கோடி மதிப்பிலான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்கள். நாளை முதல் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு மிகவும் சுதந்திரமாகவும் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் செயல்பட்டு வருகிறது.மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டு பெற்று வருகிறார்கள். பத்திரப் பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலான சட்டமுன்வடிவை, ஆளுநர் ஒப்புதல் பெற்று குடியரசு தலைவர், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரபதிவு முறைகேடுகள் குறித்து சட்டபூர்வமான ஆதாரத்தோடு புகார் அளிக்கும்போது, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக ,மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாலைப்பட்டியில் ரூ.635870- மதிப்பிலும் ஜெய விலாஸ் கார்டன் வெள்ளியன் குன்றத்தில் ரூ.646040- மதிப்பிலும் மீனாட்சி நகர் காதக்கிணறில் ரூ.533330- மதிப்பிலும் வைகை நகர் காதக்கிணறில் ரூ.541423- மதிப்பிலும் கத்தப்பட்டியில் ரூ.913550- மதிப்பிலும் களிமங்கலத்தில் ரூ.928020- மதிப்பிலும் ஆகிய பகுதிகளில் ரூ.4198233- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.