மதுரையில், கல்விக் கடன்கள் வழங்கும் மேளாவை தொடங்கி வைத்த எம்.பி. வெங்கடேசன்.
மாபெரும் கல்விக்கடன் மேளாவில் 187 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்;
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் ரோட்டரி சங்கம் ஒருங்கிணைந்து நடத்திய “மாபெரும் கல்விக்கடன் மேளா” முகாமை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் , மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்விக் கடனுதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் ரோட்டரி சங்கம் ஒருங்கிணைந்து “மாபெரும் கல்விக்கடன் மேளா” முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
இந்த கல்விக்கடன் மேளா தொடர்பாக முன்னறிவிப்பு வழங்கப்பட்டு, மாணவ , மாணவியர்கள் கூகுள் படிவம் மூலம் கல்வி கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நடைபெற்ற இந்த முகாமில், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகள் பங்கேற்று 16 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த முகாமில் 1135 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் ,260 மாணவர்கள் கூகுள் படிவம் மூலம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்முகாமில் 187 மாணவ மாணவியர்களுக்கு ரூ.15.55 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வழங்கினார்.
மேலும், கல்விக்கடன் பெறுவதற்கான கூகுள் அடுத்த வார இறுதி வரை பதிவு செய்யத் திறந்திருக்கும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 30 நவம்பர் 2023 வரை பதிவு செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அனில் , மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சௌந்தர்யா உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், வங்கியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.