மதுரை மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் முகாமில் மனுக்கள் வாங்கிய மேயர்
மதுரை மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் முகாமில் மனுக்கள் மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.;
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மதுபாலன், முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், புதிய குடிநீர் குழாய் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு தொடர்பாக 36 மனுக்களும், நகரமைப்பு தொடர்பான 7 மனுக்களும், சொத்து வரி திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக 18 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 5 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், இதர கோரிக்கை வேண்டி 1 மனுவும் என, மொத்தம் 70 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 47 மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
முன்னதாக , மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என, மேயர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இம்முகாமில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் சரவணன், நகர்நல அலுவலர் வினோத்குமார், கல்வி அலுவலர் மாரிமுத்து, உதவி ஆணையாளர் (பொ) சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி, உதவி பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.