மேக்கேதாட்டு விவகாரம்: பாஜகவினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடந்தது

Update: 2023-07-19 13:00 GMT

பைல் படம்

கர்நாடகாவில் மேகதாது அணைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்:பாஜக வினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மதுரையில் பாஜகவினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகின்ற போதெல்லாம் காவிரி நீர் பிரச்னை ஏற்படுகிறது. தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் கபினி உள்பட நான்கு இடங்களில் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னை தலைதூக்க தொடங்கியது. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தீர்வு காணப்பட்டது .

இதை தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறிய போது அப்போதைய அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இன்றைக்கு எதிர்க்கட்சி கூட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவது தவறு என்று கூறவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 66 மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம் . ஆனால் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை குறித்து மௌனம் சாதிப்பதின் மர்மம் புரியவில்லை. எனவே மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் குமார்,செயலாளர்கள் சுபா நாகுலூ, பொருளாளர் நவீன அரசு ,ஊடகப் பிரி தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News