மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை
மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.;
மதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞரை வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். தனது தம்பியை கொலை செய்த வழக்கில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வந்தார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வந்த அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்து சென்றபோது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். மேலும், அருள் முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்தார்.
தனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல்புதூர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, அருள் முருகனின் உடலானது உடற்கூராய்விற்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கூடல் புதூர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியை சேர்ந்த அருள் முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பழிக்கு பழியாக நடை பெற்றிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன் அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது.
மதுரை மாநகர் பகுதியில் பட்டபகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.