ரயிலில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்.. மதுரையில் 2 பேர் கைது..
ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்றதாக இருவரை மதுரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.;
தமிழகத்தில் பான் மசாலா, குட்கோ உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், சிலர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, மதுரை ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ரயில்வே போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்தனர். அவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில்களை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸார், அவர்கள் இருவரும் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்து பார்த்தனர். சோதனையின்போது, இருவரும் வைத்திருந்த மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 248 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக, 2 பேரையும் மதுரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது. யாருக்கு கொண்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து இருவரிடமும், போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.