மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு விழா கண்ட மதுரை பெரியார் பஸ் நிலையம்
ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பேருந்து நிலையம் சென்ட்ரல் பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டு வந்தது
மதுரையின் அடையாளமாகத் திகழும், பெரியார் பேருந்து நிலையம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைத்தார்.
மதுரையின் பல்வேறு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது. சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.167 கோடி செலவில் மிக நவீனமான முறையில் கட்டப்பட்டு வந்தது. தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போதைய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் மூலமாக திறந்து வைத்தார்.
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையம், இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுடன், முன்பு சென்ட்ரல் பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் பெரியார் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் கண்டது.
ஒரு காலத்தில் தற்போதைய, பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மதுரை சந்திப்பு ஆகிய பகுதிகள் மிகப் பெரிய நீர்நிலையாக இருந்தது. 'வலை வீசித் தெப்பம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மதுரையின் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்தைக் கருத்திற் கொண்டு இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் பிறகு மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தது பெரியார் பேருந்து நிலையமே.
மத்திய அரசின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், மதுரை மாநகரில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், பெரியார் பேருந்து நிலையம் 167.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 30 ஆயிரத்து 500 சதுரஅடியில், மூன்றடுக்கு பேருந்து நிலையமாக அமைந்துள்ளது. 58 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தப்படும். முதல் அடித்தளத்தில் 200 கடைகளும் 260 நான்கு சக்கர வாகனங்களும் இரண்டாவது அடித்தளத்தில் 4 ஆயிரத்து 269 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி உள்ளது. ஏடிஎம், அஞ்சலகம், பயணச்சீட்டு பதிவு அலுவலகம் என பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணியின் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் நிலவிய போக்குவரத்து நெரிசல், தற்போது முடிவிற்கு வரும் எனக் கருதப்படுகிறது. பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்திலும் காவல்துறை மாற்றம் செய்துள்ளது. இனி ஒரே இடத்திலிருந்து மக்கள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மதுரையின் மற்றொரு அடையாளமாகத் திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 136ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இதே நாளில் மிக நவீன வசதிகளோடு பெரியார் பேருந்து நிலையம் திறக்கப்படுவது வரலாற்றுப் பொருத்தமான நிகழ்வாகும்.