பெண்ணை அரிவாளால் மிரட்டியவர் கைது

மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-03-04 12:30 GMT

பைல் படம்

வெல்டிங் தொழிலாளியை தாக்கியவர் கைது

மதுரை சிந்தாமணி, கஜேந்திரபுரம், பாலுசாமி மகன் சூரிய பிரகாஷ் ( 24). இவர் வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் தொழில் தொடர்பாக, ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சூரிய பிரகாஷ் சம்பவத்தன்று இரவு மல்லிகை தெருவில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக சூரிய பிரகாஷ், கீரை துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்ன அனுப்பானடி, சோனையா      (38) என்பவரை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய அனுப்பானடி மோகன், ராஜாமணி ஆகிய 2 பேரை போலீசார்  தேடி வருகின்றனர்

பெண்ணை அரிவாள் முனையில் மிரட்டியவர் கைது

மதுரை பழங்காநத்தம், குடிநீர் கிணற்று சந்து பகுதியைச் சேர்ந்தவர் பையா கார்த்திக் (28). இவர் அந்த பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருமணம் ஆன 22 வயது பெண்மணி ஒருவர், சம்பவத்தன்று இரவு போட்டோ ஸ்டூடியோவுக்கு வந்தார். அப்போது அவர் ஒரு போட்டோவுக்கு பிரேக் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டனர். அப்போது பையா கார்த்திக் ஆபாசமாக- அவதூறாக பேசியதாக தெரிகிறது. எனவே அந்த பெண் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பையா கார்த்திக் அரிவாள் முனையில் மிரட்டி விட்டு தப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பையா கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனம் நிறுத்தி இடையூறு; 2 பேர் கைது

மதுரை பனகல் ரோடு, சேவாலயம் சந்திப்பில் உள்ள பள்ளிக்கூடம் முன்பாக ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக இளமனூர், முத்து நகரை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் மணி (24) என்பவரை மதிச்சியம் போலீசார் கைது செய்தனர். மதுரை பனகல் ரோடு பள்ளிக்கூடம் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்ததாக, கரும்பாலை மேலத்தெரு சுப்பிரமணி ( 45) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

மதுரை எல்லீஸ் நகர், பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (24). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் சம்பவத்தன்று இரவு போடி லைன் பகுதியில் நடந்து சென்றார். அப்போது டீக்கடை முன்பாக பதுங்கி இருந்த 3 பேர் கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக கார்த்திக், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து போடி லைன் கிருஷ்ணன் மகன்கள் சந்தான பாண்டி ( 24), பாண்டியராஜன் (36), சுந்தரபாண்டி (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய பால்பாண்டி என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதே வழக்கில் பாண்டியராஜன் மனைவி மகேஸ்வரி (30) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கார்த்திக் கைது செய்யப்பட்டார்.


Tags:    

Similar News