மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்: மத்தியக் குழுவிடம் ஆலோசிக்கப்படும்

மதுரையில் கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

Update: 2021-10-16 10:00 GMT

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் ஆட்சியர் அனீஸ்சேகர்

மதுரையில் எய்ம்ஸ் கட்டடப் பணிகள் தொடங்குவது குறித்து மத்திய அரசின் ஒருங்கிணைப்பு குழுவுடன் 20 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்றார் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

மதுரையில் அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை இன்று ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: "தமிழகத்தில் கொரோனா குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, கோவையில் மட்டுமே 100 க்கு மேலாக கொரோனா தொற்று வருகிறது, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, மக்கள் அனைவரும் முறையாக முககவசம் அணிய வேண்டும், சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை அரசு மருத்துவமனை திகழ்கிறது.மதுரை அரசு மருத்துவமனையில் 20 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளன.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்தனர்.2021 ஜனவரி முதல் இதுவரை 3,187 பேர் டெங்குவால், பாதிக்கப்பட்டு உள்ளனர்.வீடு, நிறுவனங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல தண்ணீரை தேங்க வைக்க கூடாது. டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகளை துவங்க முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது கொள்கை ரீதியாக முடிவு எடுக்க வேண்டி உள்ளது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடங்கள் கண் முன்னே இருக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளது, அந்த ஒருங்கிணைப்பு குழுவுடன் 20 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது, தமிழகத்தில் 70 முதல் 75 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, குடும்ப விழாக்கள் மூலமாக தமிழகத்தில் கொரைனா பரவுகிறது.  மக்கள் கவன குறைவாக இருக்க வேண்டாம், தடுப்பூசி குறித்த சந்தேகங்களை மக்கள் 104 என்கிற எண்ணில் கேட்கலாம், 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும், 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி தொழில்நுட்ப ஆய்வில் உள்ளது" என்றார் அவர். ஆய்வில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், டீன் ரத்தினவேல் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News