பச்சை பட்டு உடுத்தி மதுரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.;
மதுரையில் ஆண்டுதோறும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கள்ளழகர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.அதன்படி, மதுரையில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கி காட்சியளித்தார்.
முன்னதாக, இன்று அதிகாலை தல்லாகுளம் வெங்கடாஜலபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, பல்வேறு திருக்கண்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .அதைத் தொடர்ந்து, இன்று காலை கள்ளழகர் கொட்டும் மழையில் வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு, மதுரை நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், தளபதி ஆகியோர்ள் கள்ளழகரை வரவேற்றனர் .
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பல்வேறு திருக் கண்களில், சிறப்பு பூஜை நடைபெற்றது .அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது,பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்ச பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர்.இந்த விழாக்கான ஏற்பாடுகளை, ஆலய தக்கார் வெங்கடாச்சலம், துணை ஆணையர் மு. ராமசாமி குழுவினர் செய்திருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. இதில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.23-ல் காலை 10-30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்றறது.
கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியசித்திரை திருவிழாவையொட்டி, தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்றது. முக்கிய விழாக்களாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30 -ல் நடைபெற்றது. மே 1-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக் விஜயம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மே 2 -ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணியளவில் விமரிசையாக நடைற்றது.
அடுத்த நாள் மே 3-ஆம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பொதுமக்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் 20 இடங்களில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது. முக்கிய விழாவான மே 5-ஆம் தேதி சித்திரை பௌர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.