மதுரை மாவட்டத்தில் பலத்த மழை வயல் வெளிபோல மாறிய தெருக்கள்: மக்கள் அவதி
மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் வைகையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது;
மதுரை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி, அழகர் கோவில், திருப்பாலை, திருப்பரங்குன்றம், சத்திரப்பட்டி, கருப்பாயூரணி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்றும் மழை பெய்தது. மதுரை நகரில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதுரை நகரில் பெய்து வரும் மழையால், பல தெருக்களில் சாலையில் மோசம் அடைந்து பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.பல இடங்களில் மதுரை மாநகராட்சியினர் குடிநீர் திட்ட பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டியதால், பலர் தடுமாறி கீழே விழுந்து காயமேற்படும் நிலை தொடர்கிறது..
மேலும், சாலை ஓர பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சரிவர மூடாததால், ஆங்கே மழை நீர்கள் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லை பெருகி வருகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெரு, சௌபாக்கிய விநாயகர் கோயில், தெருக்களில்( வார்டு எண் 36, 37) களில், குழாய்களை பதிக்க மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை சீரமைக்காததால், வீரவாஞ்சி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை.ஆகவே, பொதுமக்கள் தனியார் குடிநீர் லாரிகளில், தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.