மதுரையில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அரசு செயலாளர் ஆய்வு
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.11.2023) மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஃ அரசு முதன்மைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) டாக்டர்.பி.சந்திரமோகன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, முன்னிலையில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட சில வார்டுப் பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் தேங்குதல் தொடர்பாக புகார்கள் வரப்பெறுகின்றன.
திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இத்தகைய நேர்வுகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். பொது மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பிரிவுச் சான்று, ஆதரவற்ற விதவைச்சான்று உள்ளிட்ட அடிப்படைச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அலுவலர்கள் இத்தகைய சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். அடிப்படைச் சான்றிதழ் தொடர்பாக நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்திட வேண்டும். சரியான காரணமின்றி விண்ணப்பங்களை நிராகரிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, மாதாந்திர உதவித் தொகை மற்றும் பட்டா ஆணை தொடர்பான விண்ணப்பங்கள் மீதும் அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளின் தரத்தில் எவ்வித சமரசமும் இருத்தல் கூடாது. அரசு திட்ட செயல்பாடுகள்இ புதிய திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் நிர்வாக ரீதியாக ஏற்படும் சிரமங்களை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) டாக்டர்.பி.சந்திரமோகன் தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையாளர் முனைவர்ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.